எகிறும் எதிர்பார்ப்பு... முதல்வர் விஜய் மனு மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தாம் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்த மனு மீது, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பிக்க உள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அத்தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் எஸ். தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.30 கோடி மதிப்பிலான நிலம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு சொத்து விவரங்களை விஜய் மறைத்துவிட்டதாகவும், சொத்துகளின் மதிப்பு மற்றும் பத்திரப் பதிவு விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும் தினேஷ் குற்றம்சாட்டியிருந்தார். சொத்து விவரங்களை மறைப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் விதிமீறலாகும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி முதலமைச்சர் விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது, விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ரூ.600 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள விஜய், மிகப்பெரிய செல்வந்தர் என்பது வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரியும். சில கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்கள் விடுபட்டிருந்தால் அது வாக்காளர்களின் முடிவை எவ்வாறு பாதிக்கும்?” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த சூழலில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.