undefined

எகிறும் எதிர்பார்ப்பு... இன்று தஞ்சையில் மக்களை சந்திக்கிறார் விஜய் - 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்றுதஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மிக முக்கியமான கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை அருகே நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்கத் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கானது. QR குறியீடு கொண்ட நுழைவுச் சீட்டு வைத்துள்ள 4900 பேர் மட்டுமே நிகழ்ச்சி இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பாதுகாப்பு காரணங்களுக்காகக் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே, அவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது மற்ற வாகனங்களிலோ பின்தொடர்ந்து வருவதை ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் அல்லது தனிநபர்கள் ட்ரோன்களைப் பறக்கவிட அனுமதி இல்லை. நேரலை வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தொலைக்காட்சியில் கண்டு களிக்கலாம். காவல்துறை அறிவுறுத்தலின்படி, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் 80% பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

நிர்வாகிகளின் வசதிக்காக நிழல் தரும் மேற்கூரை, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்து, கட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.