நேபாளத்தில் சாலை போக்குவரத்து பாதிப்பு... பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

 

நேபாளத்தில் வரலாறு காணாத பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ள இக்கட்டான சூழலில், உள்நாட்டு விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ள செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக காத்மா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்தும், பாதுகாப்பற்றவை என அறிவிக்கப்பட்டும் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் விமானப் போக்குவரட்டை மட்டுமே நம்பியுள்ள கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் தங்களது கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியுள்ளன. பேரிடர் காலத்தில் மனிதாபிமானமின்றி லாபம் ஈட்டும் இத்தகைய செயல்களுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள 57 தமிழர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.