அவலம்... சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளைச் சுமக்கும் மக்கள் !
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட இடுகொரை அருள்நகர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை பராமரிப்பின்றிப் பழுதடைந்து ஒற்றையடிப் பாதையாக மாறியுள்ளது. இதனால் கிராமத்தில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வர முடியாத அவல நிலை நீடித்து வருகிறது.
சாலையின்றித் தவிக்கும் மக்கள் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளைத் தொட்டில் கட்டி 1 கி.மீ. தொலைவிற்குத் தோளில் சுமந்து செல்கின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே நோயாளிகளைச் சுமந்து செல்லும்போது வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் நிலவி வருகிறது. சமீபத்தில் இடுகொரை அருள்நகரைச் சேர்ந்த ஞானபிரகாஷ் (53) என்பவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இளைஞர்கள் அவரைச் சுமந்து சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிராமப் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் தினமும் வனப்பாதை வழியே வனவிலங்கு அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் நோயாளிகளைச் சுமந்து செல்லும் போது காலதாமதமாகிச் சிலர் வழியிலேயே உயிரிழக்கும் கொடுமையும் நிகழ்கிறது. எனவே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் தார் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.