உலக கோடீஸ்வரர்களின் முகத்துடன் அதிசய ரோபோ நாய்கள்... சர்ச்சை வீடியோ!

 

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், உலகப் புகழ்பெற்ற கோடீஸ்வரர்களின் முகங்களைக்கொண்ட ரோபோ நாய்கள் உலா வரும் வினோதமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. பிரபல டிஜிட்டல் கலைஞர் பீப்பிள் உருவாக்கிய இந்த ரோபோக்கள், எலான் மஸ்க், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஜெப் பெசோஸ் போன்ற ஜாம்பவான்களின் சிலிகான் முகமூடிகளை அணிந்துள்ளன. பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருக்கும் இந்த இயந்திர நாய்கள், கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.

இந்த ரோபோ நாய்கள் வெறும் பொம்மைகளாக மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தங்களைச் சுற்றியுள்ள காட்சிகளைப் படம்பிடித்து, அந்தந்தக் கோடீஸ்வரர்களின் ரசனைக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் ஓவியங்களாக மாற்றி வழங்குகின்றன. உதாரணமாக, பிகாசோ முகமூடி அணிந்த ரோபோ நாயானது காட்சிகளை கியூபிச பாணியில் சித்திரங்களாக உருவாக்கி வெளியிடுகிறது.

தொழில்நுட்ப உலகில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர்கள், எப்படித் தங்களின் அல்காரிதம்கள் மூலம் மக்களின் பார்வையை மாற்றுகிறார்கள் என்பதைச் சித்தரிப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். இக்காலகட்டத்தில் கலைஞர்களை விடவும் தொழில்நுட்ப ஜாம்பவான்களே உலகத்தை வழிநடத்துகிறார்கள் என்ற கருத்தை இது முன்வைக்கிறது. புதுமையான இந்த முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், தொழில்நுட்பம் மற்றும் கலை குறித்த புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.