சிறுவனை எட்டி உதைத்த ரோபோ... பகீர் வீடியோ!
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சி நிகழ்ச்சியில் தற்காப்புக் கலை சாகசங்கள் அரங்கேற்றப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்களைக் கவரும் வகையில் மனித வடிவ ரோபோ ஒன்று மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகளை செய்து காட்டிக் கொண்டிருந்தது. இயந்திர மனிதனின் இந்த விசித்திரமான சாகசங்களை அங்கிருந்த சிறுவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த ரோபோ அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை நோக்கித் திரும்பியது. அடுத்த நொடியே அந்த ரோபோ தனது காலை நீட்டி சிறுவனின் வயிற்றில் பலமாக எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத அடியை வாங்கிய அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறியபடி அப்படியே தரையில் சுருண்டு விழுந்தான்.
இந்த விபரீத சம்பவத்தைக் கண்ட அங்கிருந்த நுகர்வோர்களும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக மீட்கப்பட்ட அந்த சிறுவனுக்கு தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அந்த ரோபோவை தயாரித்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளனர்.