சீனாவில் இயற்கை விவசாயத்தில் ஏஐ, லேசர் தொழில்நுட்பத்துடன் அசத்தும் ரோபோ!

 

உலகளவில் விவசாயத் துறையில் தொழில்நுட்பப் புரட்சிகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவில் இயற்கை விவசாயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலான அதிநவீன ரோபோ ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் லேசர் தொழில்நுட்பங்களின் கூட்டுடன் செயல்படும் இந்த ரோபோ, உலகெங்கிலும் உள்ள விவசாய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விவசாய நிலங்களில் பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் தேவையற்ற களைகளை அகற்றுவது என்பது விவசாயிகளுக்கு என்றும் பெரும் சவாலான ஒரு பணியாகும்.  இந்த ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மற்றும் ஏஐ சென்சார்கள், பயிர்கள் எவை மற்றும் தேவையற்ற களைகள் எவை என்பதை மனிதர்களின் உதவியின்றி மிகத் துல்லியமாக வேறுபடுத்தித் தெரிந்துகொள்கின்றன.

களைகளைக் கண்டறிந்த அடுத்த சில மைக்ரோ விநாடிகளில், அதிகச் செறிவுள்ள லேசர் கதிர்களை பாய்ச்சி, பயிர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படுத்தாமல் அந்த களைகளைத் தானாகவே வேரோடு அழித்து விடுகின்றன.

பொதுவாகப் பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைக் கட்டுப்படுத்த தற்போதைய நவீன விவசாயத்தில் அதிகளவில் ரசாயனக் களைக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, விளையும் உணவுப் பொருட்களையும் நச்சுத்தன்மையாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த லேசர் ரோபோவின் வருகையால், விவசாய நிலங்களில் ரசாயனங்களின் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது தூய்மையான இயற்கை விவசாயத்தை பெரிய பரப்பளவிலான நிலங்களில் குறைந்த செலவிலும், குறைந்த ஆள் பற்றாக்குறையுடனும் எளிதாகச் செய்ய வழிவகுக்கிறது.

தற்போது இந்த அதிநவீன ரோபோ விவசாய நிலத்தில் இறங்கி, மிக வேகமாகப் பயணித்து லேசர் கதிர்கள் மூலம் களைகளைத் துவம்சம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. விவசாயத் துறையில் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் இந்த அசுர வளர்ச்சி, எதிர்கால உணவு உற்பத்தியில் மிக முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.