ஓடும் பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ்... வைரலான வீடியோவால் போலீசார் விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில், ஓடும் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் ஒருவர் அமர்ந்து தனது காதலனுடன் நெருக்கமாகப் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்தீபன் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்வன் கமன் சாலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் தனது பைக்கை சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, இளம்பெண் ஒருவர் பைக்கின் பின் இருக்கையில் அமர்வதற்குப் பதிலாக, முன்பக்கத்தில் உள்ள பெட்ரோல் டேங்க் மீது இளைஞரை நோக்கி அமர்ந்தபடி ரொமான்ஸ் செய்தவாறு பயணித்துள்ளார்.
இருவரும் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து நிறைந்த சாலையில் சக வாகன ஓட்டிகளுக்கும் தங்களது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை, பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வைரலான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், சந்தீபன் காட் காவல் நிலைய போலீசார் இது குறித்துத் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோவில் பதிவாகியுள்ள பைக்கின் பதிவு எண்ணைக் கொண்டு, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட அந்தக் காதல் ஜோடி யார் என்பதைக் கண்டறிந்து அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.