'அறைவேக்காடு.. நடிப்பு.. புரிதலின்மை'.. தவெகவை வறுத்தெடுத்த போஸ் வெங்கட்!
சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்யின் உரையும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நடத்திய வெளிநடப்பும் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் விஜய்யின் இன்றைய சட்டமன்றப் பதிலுரையை நடிகரும், திமுக பிரமுகருமான போஸ் வெங்கட் தனது சமூக ஊடகப் பக்கத்தில் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற இறுதி நாள் கூட்டத்தொடர் முடிவடைந்த உடனே, நடிகர் போஸ் வெங்கட் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'வன்மம்.. பொய்.. இயலாமை.. அறியாமை.. தெளிவின்மை.. அறைவேக்காடு.. நடிப்பு.. புரிதலின்மை.. இடம் பொருள் தெரியாமை.. அநாகரீகம்.. எங்க போயி முடியப்போகுதோ..' என அடுக்கடுக்கான கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி முதலமைச்சரின் உரையைச் சாடியுள்ளார். இப்பதிவு தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
போஸ் வெங்கட்டின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, அவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவினரும் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். சட்டமன்றப் பேரவை என்பது மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும், திட்டங்களையும் விவாதிக்கும் மாண்புமிகு இடமாகும். ஆனால், அங்கு முதலமைச்சர் விஜய் தனது பழைய திரைப்பட பாணி வசனங்களை ஒப்பித்து, அரசியல் மேடை போலப் பேசி வருகிறார் என திமுக தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக, திமுக என இருதரப்புமே மாறி மாறித் தவெக அரசின் 40 நாள் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், போஸ் வெங்கட்டின் இந்த எக்ஸ் பதிவு தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே இணையத்தில் பெரும் விவாதத்தையும், காரசாரமான கருத்து மோதல்களையும் உருவாக்கியுள்ளது.