பழநியில் ரோப்கார் சேவை நிறுத்தம்... வின்ச் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தவிப்பு!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குத் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை தினமான நேற்றுத் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனிடையே ரோப்காரில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தற்போது ரோப்கார் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோயிலுக்குச் செல்ல விரும்பிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வின்ச் நிலையத்தை மட்டுமே அதிகளவில் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது.

ரோப்கார் இயங்காததால் வின்ச் நிலையத்தில் பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்குச் சென்றனர். கூட்டம் மிகக் கடுமையாக இருந்ததன் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் முறைப்படுத்தப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. தரிசனம் முடிந்த பிறகு திருக்கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை உட்கொள்ளவும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்றனர்.

பக்தர்களின் வாகன வருகை அதிகரிப்பால் கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதிகளில் உள்ள சுற்றுலா வாகன நிறுத்தங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் பழநி நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் உள்ளூர் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே பழநி புறநகர்ப் பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகளைத் திருக்கோவில் நிர்வாகமும் நகராட்சியும் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ரோப்கார் சேவை இல்லாததால் வின்ச் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தவித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.