தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையாவின் மனைவி சிவலட்சுமி காலமானார்!

 

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான திவங்கத கொணிஜேட்டி ரோசையாவின் மனைவி சிவலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், ஹைதராபாத் அமீர்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் 

நீண்ட காலம் நாட்டின் மிக உயரிய அரசியல் பதவிகளில் வகித்த தனது கணவர் ரோசையாவின் அரசியல் பயணத்திற்கு சிவலட்சுமி எப்போதும் பின்னணியில் இருந்து பெரும் துணையாக நின்றுள்ளார். கணவர் மக்கள் பணியில் தீவிரமாக இருந்த காலகட்டங்களில் எவ்வித ஆடம்பரமும் இன்றி, மிகவும் எளிமையாக வாழ்ந்து தனது குடும்பப் பொறுப்புகளை அவர் திறம்பட கவனித்து வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அவரது கணவர் ரோசையா மறைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் அமீர்பேட்டை இல்லத்திலேயே வசித்து வந்தார்.

அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் அரசியல் வட்டாரங்களில் பெரும் சோக அலை வீசி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பல மூத்த தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்குத் தங்களது ஆறுதல்களைக் கூறி வருகின்றனர்.