கடலூர் அருகே பயங்கரம்... பிரபல ரவுடி வெட்டிக்கொலை!
கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள தாடி நத்தம் பகுதியில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி புகழேந்தி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த புகழேந்தியின் உடலை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட புகழேந்தி மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை மர்ம நபர்கள் கடத்தி வந்து இங்கு கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஒருவரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த கொலைச் சம்பவம் கடலூர் மற்றும் புதுச்சேரி எல்லைப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் யார் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.