பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை... திருச்சியில் பயங்கரம்!
திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற முதியவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் நடந்த பிரபல ரவுடி சந்திரமோகன் கொலையில் இவருக்கு முக்கிய தொடர்பு இருந்தது. இந்த நிலையில், சுரேஷ் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஆயுதங்களுடன் மறைந்திருந்த ஒரு கும்பல் இவரை வழிமறித்தது.
அந்த கும்பலைக் கண்டதும் சுரேஷ் தப்பி ஓட முயன்றார். ஆனால், விடாமல் துரத்திய அந்த மர்ம நபர்கள், சுரேஷை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூரத் தாக்குதலில் அவரது மனைவியும் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், சுரேஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சந்திரமோகன் கொலைக்குப் பழி தீர்க்கவே இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.