“புதுமணப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்... பள்ளி, கல்லூரிகளில் ‘நாப்கின் ஏடிஎம்’ இயந்திரங்கள் - லாட்டரி மார்ட்டின் மகன் தேர்தல் வாக்குறுதி!
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் திருமண பந்தத்தில் நுழையும்போது, அவர்களுக்குப் பெரும் நிதி உதவியாக தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று மார்டின் அறிவித்துள்ளார். ஏழைக் குடும்பங்களின் திருமணச் சுமையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மற்றுமொரு முக்கிய வாக்குறுதியை அவர் அளித்துள்ளார்: புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்துப் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின் வழங்கும் தானியங்கி ஏடிஎம் இயந்திரங்கள் அமைத்துத் தரப்படும்.
புதுச்சேரித் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக-வுடன் இணைந்து லட்சிய ஜனநாயகக் கட்சி களம் காண்கிறது. குறிப்பாகப் புதுச்சேரியின் தனித்துவத்தைக் காக்கவும், மத்திய அரசின் திட்டங்களை முழுமையாகப் புதுச்சேரி மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் தமது கட்சி பாடுபடும் என ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது பிரசாரத்தில் தெரிவித்துள்ளார்.