₹100 கோடி லஞ்ச ஊழல் வழக்கு.. முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

 

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த அன்பில் மகேஷைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரின் தனிப்படை இன்று கைது செய்தது. முன்னதாக ஊழல் வழக்கில் தான் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்த்துதல், DTCP அனுமதி மற்றும் பிற அரசுச் சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் ஏற்கனவே இடைத்தரகர்களாகச் செயல்பட்ட பி.டி.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகளின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.