CM விஜயின் பெரம்பூர் தொகுதியில் ரூ.100 கோடியில் திட்டங்கள்

 

தமிழக முதலமைச்சர் விஜய் சொந்தத் தொகுதியான சென்னை பெரம்பூரில், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி நிதி, முதலமைச்சரின் சிறப்பு நிதி, மாநில அரசு மானியங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கி நிதியுதவி ஆகியவற்றின் கூட்டுப் பங்களிப்போடு இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட உள்ளன.

பெரம்பூர் ஜி.என்.டி சாலை/எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகே உள்ள சர்மா நகரில் 6 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் நீச்சல் குளம், தடகளப் பாதை, கால்பந்து மைதானம், கிரிக்கெட் வலைப் பயிற்சி தளம், பேட்மிண்டன், பாக்ஸிங் மற்றும் தற்காப்புக் கலைகளுக்கான வசதிகள் இடம்பெறவுள்ளன.

வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் பகுதி மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சத்தியமூர்த்தி நகரில் உள்நோயாளி பிரிவுகளுடன் கூடிய 3 அடுக்கு நவீன மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

மகா கவி பாரதி நகரின் நார்த் அவென்யூ சாலையில் சுமார் 270 மீட்டர் தூரத்திற்கு அண்ணா நகர் பாணியில் நவீன உணவுக் வீதி மற்றும் வணிகப் பகுதி அமைக்கப்படவுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் உள்ள 1950, 1960-களில் கட்டப்பட்ட பழைய மாநகராட்சிப் பள்ளிகளை நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கவும், வியாசர்பாடி குளத்தை தூர்வாரி அழகுபடுத்தவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கட்டுமானப் பணிகளுக்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களிடம் கட்டட உறுதித்தன்மை சான்றிதழ் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.