ரூ.100 கோடி பள்ளி அங்கீகார மோசடி.. திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் மீது 'குண்டர் சட்டம்' பாய்ந்தது!
தனியார் பள்ளிகளுக்குத் தேவையான அரசின் சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் மாற்று அங்கீகாரங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் மெகா மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு" என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பை நடத்தி வந்த பி.டி.அரசகுமார் (59), தனக்கு அரசியல் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய செல்வாக்கு இருப்பதாகக் கூறி வந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களது தற்காலிக அங்கீகாரத்தை நிரந்தரமாக்குவதிலும், சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அனுமதிகளைப் பெறுவதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்து வந்தன.
இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அரசகுமார், கல்வித்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் அனைத்துச் சட்டப்பூர்வ அனுமதிகளையும் சுலபமாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பல கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார். ஆனால், வாக்குறுதி அளித்தபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார்.
இது தொடர்பாகப் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் இளங்கோவன் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27-ம் தேதி அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரசகுமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள் அடுத்தடுத்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்களைக் குவித்தனர். விசாரணையில் இவர் திட்டமிட்டுப் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் சுருட்டியதும், பொது அமைதி மற்றும் பொருளாதார ஒழுங்குக்குக் குந்தகம் விளைவித்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் ஐ.பி.எஸ் அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில், சிறையில் இருக்கும் பி.டி.அரசகுமார் மீது நேற்று (சூலை 13) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
திமுக-வில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகி, தனியார் பள்ளிகளை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்த வழக்கில் தற்பொழுது குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு வரை பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்திலும், கல்வி நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.