ரூ.1,000 கோடி ஊழல்... டாஸ்மாக் வழக்கில் ரத்தீஷுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிப்பு!

 

டாஸ்மாக் விவகாரத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், வெளிநாட்டிற்குத் தப்பியோடித் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான ரத்தீஷுக்கு எதிராகச் சர்வதேச அளவில் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாஸ்மாக் ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் கோடி கணக்கில் பணப்பரிமாற்றம் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படும் ரத்தீஷ் என்பவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவர் வெளிநாட்டிற்குத் தப்பியோடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறை சார்பில் முன்னதாக அவருக்கு எதிராக 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்குள் அவர் சிக்காததைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் கோரிக்கையின் பேரில் இன்டர்போல் அமைப்பு மூலம் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வதேச வாரண்ட் மூலம், ரத்தீஷ் உலகின் எந்தப் பகுதியில் பதுங்கியிருந்தாலும் அந்த நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்து இந்தியா அழைத்துவர உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரூ.1,000 கோடி ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்தும் அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.