தேர்தல் பணி ஊதியத்தில் ரூ.1,000 பிடித்தம்... அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள வேளையில், இரவு பகலாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஊதியப் பிடித்தம் என்ற பெயரில் 'இடி' போன்ற செய்தி கிடைத்துள்ளது. உணவிற்காக ஒரு பெரிய தொகையை அதிகாரிகள் முறையற்ற வகையில் பிடித்தம் செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட தொகை மதிப்பூதியமாக (Remuneration) வழங்கப்படும். இதில் உணவிற்கான செலவு போக மீதமுள்ள தொகை ஊழியர்களுக்குச் சேர வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் உணவிற்காக சுமார் ரூ.300 வரை மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளில் மட்டும் பணிபுரிந்த ஊழியர்களுக்குத் தலா ரூ.1,000 வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பணியாற்றிய தங்களுக்கு, இப்போது வழங்கப்பட வேண்டிய மதிப்பூதியத்திலும் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என ஊழியர்கள் வேதனையடைந்துள்ளனர்.
"சாப்பிட்ட உணவின் தரத்திற்கும், பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,000-க்கும் சம்பந்தமே இல்லை. அதிகாரிகளிடம் இதனை நேரடியாகக் கேட்கவும் பயமாக இருக்கிறது. இது குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும்," எனப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த முறையற்ற வசூல் மற்றும் ஊதியப் பிடித்தம் தொடர்பாக உயர் அதிகாரிகள் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கிடையே, மற்ற தொகுதிகளுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் அதிகத் தொகை வசூலிக்கப்பட்டது எப்படி? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.