ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்?! - ரிசர்வ் வங்கி விளக்கம்!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நடுத்தர மக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பெரும்பாலான தனிநபர்கள் தங்களின் தேவைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். சம்பளக் கணக்கு, சேமிப்புக் கணக்கு, தொழில்முறைக் கணக்கு எனப் பல கணக்குகளைப் பராமரிப்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில், "தனிநபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருந்தால் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூ.10,000 அபராதம் விதிக்கவுள்ளது" என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் அந்தச் செய்தியில், தனிநபர்கள் தங்களது பெயரில் பல வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்க மத்திய அரசு புதிய மற்றும் கடுமையான அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, "ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால், அவர் உடனடியாகத் தனக்குத் தேவையில்லாத இதர வங்கிக் கணக்குகளை மூட வேண்டும். அவ்வாறு மூடாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு மற்றும் வருமான வரித்துறையின் மூலம் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்" என்று அந்தச் செய்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தி லட்சக்கணக்கான வாசகர்களால் பார்க்கப்பட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறியது.
பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய இந்தச் செய்தி குறித்து வங்கித் துறை வட்டாரங்கள் மற்றும் நிதித்துறை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, இது முற்றிலும் அஸ்திவாரமற்ற, போலியான செய்தி என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர்கள் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து எந்தவொரு உச்ச வரம்பையும் விதிக்கவில்லை. ஒரு இந்தியக் குடிமகன் தனது நிதித் தேவைகளுக்கு ஏற்ப, சட்டப்பூர்வமாக எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் துவங்கவும், அதைப் பராமரிக்கவும் முழு உரிமை உண்டு. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்கு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று பரவும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், பொதுமக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசு அபராதம் விதிக்காவிட்டாலும், ஒருவர் அதிகப்படியான வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. இதனாலேயே, மக்கள் தங்களின் தேவையற்ற கணக்குகளை மூட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு வங்கியிலும் கணக்கைப் பராமரிக்க ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். பல கணக்குகள் இருக்கும் போது, அனைத்திலும் இந்தத் தொகையைப் பராமரிப்பது கடினம். அவ்வாறு பராமரிக்கத் தவறினால், வங்கிகளே குறிப்பிட்ட தொகையை அபராதமாகக் கழித்துக் கொள்ளும்.
ஒவ்வொரு கணக்கிற்கும் ஏடிஎம் கார்டு கட்டணம், எஸ்எம்எஸ் கட்டணம் என ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்படும். நீங்கள் ஒரு வங்கிக் கணக்கை ஓராண்டு அல்லது அதற்கு மேல் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால், அது 'செயல்படாத கணக்காக' மாற்றப்படும். வருமான வரித் தாக்கல் செய்யும் போது, உங்களுடைய அனைத்து வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், அதில் வந்துள்ள வட்டி வருமானத்தையும் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். கணக்குகள் அதிகமாக இருந்தால் இதைக் கணக்கிடுவது சவாலாக மாறும்.
சமூக வலைதளங்களில் வரும் இது போன்ற போலிச் செய்திகளைப் பார்த்துப் பயந்து, அவசர அவசரமாக உங்களது முக்கிய வங்கிக் கணக்குகளை மூடத் தேவையில்லை. எனினும், உங்களுடைய நிதி மேலாண்மையை எளிதாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். நீங்கள் வேலை மாறியதால் முந்தைய நிறுவனத்தின் சம்பளக் கணக்கு அல்லது நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாத கணக்குகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்ட வங்கிப் கிளைக்குச் சென்று முறையான படிவத்தை அளித்துக் கணக்கை முழுமையாக மூடிவிடுவது நல்லது.
வங்கி விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ (rbi.org.in) அல்லது முன்னணி செய்தி ஊடகங்களிலோ மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகும். வாட்ஸ்அப் ஃபார்வர்டு செய்திகளை அப்படியே நம்ப வேண்டாம். உங்களது வங்கிக் கணக்கு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக உங்களது பகுதிக்கு உட்பட்ட வங்கி கிளை மேலாளரை அணுகித் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.