ரூ.1,042 கோடியில் புதிய புறவழிச்சாலை - வேலூர் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அசத்தல் அறிவிப்பு!
வேலூர் மாநகரில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், சுமார் ரூ.1,042 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகச் சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.
விழுப்புரம் - மங்களூரு சாலையை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் திட்டத்தின் கீழ், வேலூர் மாநகருக்கு 20.5 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தடப் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தப் புறவழிச்சாலை லத்தேரியில் தொடங்கி, தங்ககோயில் வழியாக நெல்வாயில் நிறைவடைகிறது. நில எடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இத்திட்டத்திற்காக ரூ.1,042 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்புதல் தற்போது மத்திய அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.
காட்பாடி ரயில் நிலையம் முதல் பாலாறு பாலம் வரை உயர்மட்டப் பாலம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கச் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், செங்கல்பட்டு முதல் சென்னை வரையிலான கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். மேலும், சென்னை - கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.