பாஜ தலைவர் நயினார் உறவினர், தொழிலதிபரிடம் ₹1.15 கோடி பறிமுதல் - நெல்லையில் பரபரப்பு!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நெல்லையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ₹1.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'சாந்தி ஸ்வீட்ஸ்' அல்வா கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ₹40 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதேபோல், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 'அருவி பேக்கரி' உரிமையாளர் நடராஜன் மற்றும் அவரது மனைவி லட்சுமி நடராஜன் (பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் எனக் கூறப்படுகிறது) ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ₹75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவரின் உறவினர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்களின்றி ₹50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.