FQL ஆப் மூலம் ரூ.150 கோடி மோசடி - தவெக நிர்வாகிகள் தலைமறைவு!
மதுரை மேலூர் மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பாகும் என்று ஆசைவார்த்தைக் கூறி சுமார் ரூ.150 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FQL டிரேடிங் மற்றும் VG டிரேடிங் என்ற ஆன்லைன் செயலிகள் மூலம் குறைந்த முதலீட்டில் தினமும் அதிக வருமானம் மற்றும் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் செய்யப்பட்டு மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நத்தம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 60,000 பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். மதுரை, மேலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்த்தால் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது பணத்தை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முதலீடு செய்த பணத்தை ஏமாந்த 500-க்கும் மேற்பட்டோர் நத்தம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மேலூர் அருகே கட்டயம்பட்டியில் உள்ள நிறுவனத்தின் ஏஜென்ட் வீட்டைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மதுரை - மேலூர் நெடுஞ்சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த மோசடிக்குக் காரணமான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகளான முத்துப்பாண்டி மற்றும் ரஞ்சித் ஆகியோர் தலைமறைவாகியுள்ளதால், காவல்துறையினர் அவர்களின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மதுரை எஸ்பி அலுவலகத்தில் 1,527 முறைப்பாட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.