சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.1.50 லட்சம் லஞ்சமா? முதல்வர் முன்னிலையில் பேசிய மாணவியால் சர்ச்சை!

 

சர்வதேச தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க ரூ.1.5 லட்சம் பணம் திரட்ட முடியாமல் போனதால் வாய்ப்பை இழந்ததாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி முன்னிலையில் 17 வயது மாணவி சாய்ரா பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.

உத்தரகாண்டைச் சேர்ந்த சாய்ரா என்ற மாணவி தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, ரொமேனியா நாட்டில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிக்குத் தேர்வானார். சர்வதேசப் போட்டியில் பங்கேற்கச் செலவிற்காக ரூ.1.5 லட்சம் தேவைப்பட்ட நிலையில், அதைத் திரட்ட முடியாமல் போகவே அவரால் ரொமேனியா செல்ல முடியவில்லை.

டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி கலந்து கொண்ட போது, அம்மாணவி தனது இந்த ஏமாற்றத்தைக் கூறி வருத்தப்பட்டார். முதல்வர் அவரைத் தேற்றினார்.

அரசு அதிகாரிகளால் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், அதைக் கொடுக்க முடியாமலேயே மாணவி வாய்ப்பை இழந்ததாகவும் பாஜக அரசு மீது காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதன் தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியின் முழுமையான வீடியோ காட்சிகள் வெளியாயின.

போட்டிக்கான மொத்தச் செலவில் ரூ.1.7 லட்சத்தை அமைப்பாளர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ள ரூ.1.5 லட்சத்தை தான் சொந்தமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததாகவும் மாணவி தெளிவாக விளக்கமளித்தார். தான் பள்ளி நிர்வாகத்திடமோ அல்லது வேறு அமைப்புகளிடமோ நிதியுதவி கேட்கத் தவறி விட்டதாகக் கூறிய அம்மாணவி, அரசு அதிகாரிகளோ அல்லது வேறு யாரோ லஞ்சம் கேட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் லஞ்சப் புகார் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.