₹15,000 கோடி முதலீடு போச்சு... நிலம் ஒதுக்கீட்டில் தாமதத்தால் தமிழகத்திற்குப் பதில் ஆந்திராவிற்குச் செல்கிறதா முதலீடு?!

 

மத்திய அரசின் 'மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்'  நிறுவனம் தூத்துக்குடியில் திட்டமிட்டிருந்த ₹15,000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தள முதலீடு, தற்போது ஆந்திர மாநிலத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ₹15,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக, தமிழக வழிகாட்டி நிறுவனத்துடன் மசகான் டாக் நிறுவனம் குஜராத்தில் வைத்து ஒப்பந்தம் செய்தது.

திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட சில காரணங்களால், இந்நிறுவனம் தனது திட்டத்தை மாற்றி ஆந்திராவில் முதலீடு செய்ய ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகள் இம்மாதம் 11-ஆம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, இந்தியாவின் கப்பல் கட்டும் துறை மற்றும் கடல்சார் தொழில்துறை வளர்ச்சியில் ஆந்திர மாநிலம் பங்களிக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடியில் அமையவிருந்த இந்த மெகா முதலீட்டுத் திட்டம் ஆந்திராவிற்கு கைமாறும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.