ஆட்டோ , டாக்சி ஓட்டுனர்களுக்கு  ரூ.15,000...  ஆந்திர அரசு அதிரடி உத்தரவு!

 

 

ஆந்திராவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தால் வருமான இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆந்திராவில் 'ஸ்திரீ சக்தி' என்ற பெயரில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, 'ஆட்டோ ஓட்டுநர்கள் சேவை' என்ற பெயரில் நிதியுதவித் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, சொந்தமாக ஆட்டோ, மோட்டார் கேப் மற்றும் மேக்ஸி கேப் வைத்திருந்து ஓட்டும் தகுதியுள்ள ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.231.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள ஓட்டுநர்களின் வங்கிக் கணக்குகளில் நிதியுதவி நேரடியாகச் செலுத்தப்படுகிறது.