₹15.27 கோடி சொத்துக்கள் சேதம்... இமாசல பிரதேசத்தில் கனமழையால் 14 பேர் பலி!

 

இமாசல பிரதேச மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற மழைக்காலச் சம்பவங்களில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான நேரடிச் சம்பவங்களில் சிக்கி ஜூன் 30-ஆம் தேதி வரையில் மட்டுமே 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர, மோசமான வானிலை மற்றும் மழையினால் ஏற்பட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. கனமழையின் காரணமாக இமாசல பிரதேசத்தின் உள்கட்டமைப்புகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, பொதுமக்களின் வீடுகள் மற்றும் அரசுச் சொத்துக்கள் என ஒட்டுமொத்தமாக ₹15.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் முக்கியச் சாலைகளின் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததாலும், விநியோகக் குழாய்கள் உடைந்ததாலும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் பல மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றிப் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளும், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆபத்தான மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.