ரூ.1.8 லட்சம் கோடி வருவாய் இழப்பு... கத்தார் எரிசக்தி பேரிடர் - 17% LNG உற்பத்தி முடக்கம்!

 

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் கத்தாரின் எரிசக்தித் துறை சந்தித்துள்ள வரலாறு காணாத இழப்புகள் உலக நாடுகளை பதற செய்துள்ளது. 

கத்தாரின் ராஸ் லாஃபான் தொழிற்பேட்டை மீது ஈரான் நடத்திய தாக்குதல், அந்த நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, உலகளாவிய எரிசக்தி சந்தையையே நிலைகுலையச் செய்துள்ளது. 

கத்தாரின் மொத்த 14 எல்என்ஜி (LNG) உற்பத்திப் பிரிவுகளில், 2 பிரதான பிரிவுகள் மற்றும் ஒரு திரவ எரிபொருள் (GTL) ஆலை ஈரானிய ஏவுகணைகளால் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் ஆண்டுக்கு 1.28 கோடி டன் (12.8 Million Tonnes) எல்என்ஜி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது கத்தாரின் மொத்த ஏற்றுமதி திறனில் 17% ஆகும்.

கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் சி.இ.ஓ சாத் அல்-காபி ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். சேதமடைந்த ஆலைகள் மிகவும் சிக்கலான மற்றும் பிரம்மாண்டமான கட்டமைப்பைக் கொண்டவை. இவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்.

இந்தச் சேதங்களைச் சீரமைக்க மட்டும் சுமார் 26 பில்லியன் டாலர் (சுமார் ₹2.1 லட்சம் கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி முடக்கத்தால் கத்தாருக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.7 லட்சம் கோடி) வருவாய் இழப்பு ஏற்படும்.

உற்பத்தி முடங்கியுள்ளதால், கத்தார் எனர்ஜி நிறுவனம் தனது நீண்டகால வாடிக்கையாளர்களான இந்தியா, தென்கொரியா, சீனா, இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு வழங்க வேண்டிய எரிவாயு விநியோகத்தில் 'தவிர்க்க முடியாத காரணத்தால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாமை' நிலையை அறிவித்துள்ளது. இந்தியா தனது எல்என்ஜி இறக்குமதியில் சுமார் 40 சதவீதத்தைக் கத்தாரிடம் இருந்தே பெறுகிறது.

எல்என்ஜி விநியோகம் குறைந்தால், இந்தியாவில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உரத் தொழிற்சாலைகளின் செயல்பாடு பாதிக்கப்படலாம். சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதால், வரும் மாதங்களில் சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) விலைகள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.