ரூ.2 லட்சம் கோடி முதலீடு... இந்தியாவில் மிகப்பெரிய தரவு மையத்தை அமைக்கிறது ஏர்டிரங்க் நிறுவனம்!
ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஹைப்பர்ஸ்கேல் தரவு மைய நிறுவனமான ஏர்டிரங்க் , இந்தியாவின் மிகப்பெரிய தரவு மையத்தை மும்பையில் அமைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தரவு மையக் கட்டமைப்பில் முன்னணி வகிக்கும் ஏர்டிரங்க் நிறுவனம், இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய மாற்று முதலீட்டு நிறுவனமான அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது:
உலகமே வியக்கும் வகையில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான அசாத்திய முதலீட்டில் இந்த அதிநவீன தரவு மையம் உருவாக்கப்பட இருக்கிறது. இந்தத் தரவு மையம் ஒட்டுமொத்தமாக 3 கிகாவாட் மின்சாரத் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட உள்ளது. இது ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிகப்பாரிய தரவு மையக் கட்டமைப்புகளில் ஒன்றாகத் திகழும் எனத் தொழில் துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஏற்கனவே சர்வதேச அளவில் ஹாங்காங், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் வெற்றிகரமாகத் தனது அதிநவீன ஹைப்பர்ஸ்கேல் தரவு மையங்களை இயக்கி வரும் ஏர்டிரங்க் நிறுவனம், தற்பொழுது இந்த புதிய மும்பை திட்டத்தின் மூலம் முதன்முறையாக இந்திய டிஜிட்டல் சந்தையில் தடம் பதிக்கிறது.
ஏன் இந்தியா? இந்தியாவில் தற்பொழுது செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் 5G தொழில்நுட்பங்களின் பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால், தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கூடியுள்ளது. இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே ஏர்டிரங்க் இந்த மெகா முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்கிறது.