₹20 கோடி தங்கக்காசு மோசடி.. காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கைது!

 

குறைந்த விலைக்குத் தங்கக்காசுகள் மற்றும் வீட்டு மனைகள் வாங்கித் தருவதாகக் கூறி, சக காவலர்களின் குடும்பத்தினரிடமே பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஷீலா மேரி திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவரிடம் ஓட்டுநராக இருந்த பிரபு மணி என்பவருடன் இணைந்து இந்த மோசடி திட்டத்தைத் தீட்டியுள்ளார். "குறைந்த விலைக்குத் தங்கக்காசு தருகிறோம்" என ஆசைவார்த்தை கூறி, சக காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளனர்.

இதற்காகக் கொடுங்கையூர் பகுதியில் பிரபு மணி தனியாக அலுவலகம் நடத்தி வந்துள்ளார். தொடக்கத்தில் சிறிய தொகை கொடுத்துச் சரியாகத் தங்கக்காசு வாங்கிய போலீசார், அதனை நம்பிப் பின்னர் கோடிக்கணக்கில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளனர்.  கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்ட பிரபு மணி, கூறியபடி தங்கக்காசுகளையும் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுத் தலைமறைவானார். ஒட்டுமொத்தமாக இந்த கும்பல் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த இமாலய மோசடி திட்டத்திற்குப் பின்னணியில் பெண் ஆய்வாளர் ஷீலா மேரி உடந்தையாக இருந்ததும், இதற்காக அவருக்குக் குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்பட்டதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் அம்பலமானது. பாதிக்கப்பட்ட காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில், மோசடிக்கு முக்கியக் காரணமான பிரபு மணியை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

ரூ. 20 கோடிக்கும் மேல் மோசடி செய்ய உதவிய குற்றத்திற்காக, ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியைக் கடந்த ஜூன் 15-ஆம் தேதி வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் வைத்துப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண் ஆய்வாளர் ஷீலா மேரி தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.