அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு ரூ.20 லட்சம் லஞ்சம்... தவெக செயலாளர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!
தேனி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக ஆளும் தவெக தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்புப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தின் பின்னணி விபரங்கள் பின்வருமாறு:
தேனி மாவட்டத்தில் தகுதியான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்காக, தேனி தெற்கு மாவட்டத் தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி என்பவர் பெரும் தொகையைக் லஞ்சமாகக் கோரியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நியமனத்திற்காக அவர் ரூ. 20 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகச் சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாகத் தகவல்களும் ஆடியோக்களும் வெளியாகித் தீயாகப் பரவி வந்தன.
சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வ நடவடிக்கை கோரி காவல் துறையில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணை கோரி மனு: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வித்யாசாகர் என்பவர், இன்று மாலை தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரிடையாகச் சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "அரசு வழக்கறிஞர் போன்ற உயரிய மற்றும் நேர்மையான பதவி நியமனத்தில், தவெக மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனால் தகுதியான வழக்கறிஞர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். எனவே, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகார் விபரம் குறித்துக் காவல் துறை உடனடியாக லஞ்ச ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவரே லஞ்சப் புகாரில் சிக்கியிருப்பது முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக தலைமைக்கு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த லஞ்சப் புகார் மனுவைப் பெற்றுக்கொண்டுள்ள தேனி மாவட்ட எஸ்பி அலுவலக அதிகாரிகள், முதற்கட்டமாகப் புகாரின் நம்பகத்தன்மை குறித்தும், பணப் பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க உத்தமபாளையம் உட்கோட்டப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். எஸ்பி அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் திரண்டதைத் தொடர்ந்து, அங்கு தேவையற்ற சலசலப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் தடுக்க போலீசார் தகுந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.