MSME-க்களுக்கு மத்திய அரசின் ரூ.2.22 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம்: 90% ‘சாவரின் கேரண்டி’ - 4 ஆண்டுகள் சலுகை நீட்டிப்பு!
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பிலிருந்து சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்க, மத்திய அரசு ரூ.2.22 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் ஜவுளி, ரசாயனம், மற்றும் உற்பத்தித் துறைகள் கடும் மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளன.
தொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவற்றை நலிவடையாமல் காக்க மத்திய நிதி அமைச்சகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிறு, குறு நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கும் கடன்களுக்கு 90% வரை மத்திய அரசே 'சாவரின் கிரெடிட் கேரண்டி' எனும் உத்தரவாதத்தை வழங்கும். அதாவது, நிறுவனங்களால் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டால், 90% பொறுப்பை அரசே ஏற்கும். இதற்கெனத் தனியாக இரண்டு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலங்களில் செயல்படுத்தப்பட்டதைப் போலவே, இந்தப் புதிய திட்டமும் அடுத்த 4 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள ஜவுளி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் MSME நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் ஒரு 'ஆக்சிஜன்' போலச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிணையும் இன்றி எளிதாகக் கடன் பெற இது வழிவகுக்கும்.
மேற்கு ஆசியப் பதற்றத்தால் நலிவடைந்து வரும் இந்தியத் தொழில்துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர இந்தத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.