மலேசியாவில் பயிலும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு!

 

மலேசியாவில் உயர் கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் நிலுவையில் இருந்த நிதியுதவி தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகச் சமூக நீதித்துறை தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்.டி.) படித்து வருபவர் பாரதிதாசன். அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வித் திட்டத்தின்கீழ் தனக்குரிய நிதி உதவி கிடைக்காததால், சக மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் கடன் வாங்கியே படிப்பைத் தொடர்வதாகக் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட வீடியோ அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவரின் விவகாரம் குறித்துத் விளக்கம் அளித்துள்ள சமூக நீதித்துறை, நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே கல்விக் கட்டணம் மற்றும் வாழ்வாதாரத் தொகை என ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் கூடுதல் தொகையாக ரூ.23.95 லட்சம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தமிழக அரசு மாணவரின் கல்விக்கு முழு உதவி செய்யும் என்றும், மூளை திசுக்கள் தொடர்பான இந்த ஆராய்ச்சியைத் தமிழகத்தில் அவர் மட்டுமே மேற்கொள்வதால் படித்து முடிக்கத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆராய்ச்சிப் பொருட்களுக்கான கோரிக்கையும் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.