வசூலித்த ரூ. 2,431 கோடி எங்கே? இலவச தட்கல் மின்இணைப்பு குறித்து ஐகோர்ட்டு கேள்வி!
தமிழகத்தில் சாதாரண முறையில் காத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல், தட்கல் முறையில் பணம் செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து மதுரை ஐகோர்ட்டு கடும் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், 2021-22-ம் ஆண்டு முதல் தட்கல் திட்டத்தின் கீழ் 89,289 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.2,431 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் 44,296 பேர் இணைப்புக்காகக் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட இந்தத் தொகை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்துச் சிறப்புத் தணிக்கை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தட்கல் முறையினால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தட்கல் திட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட்ட நிதி எதன் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது மற்றும் அதற்கான தணிக்கை விவரங்கள் என்ன என்பது குறித்து விரிவான பதிலளிக்குமாறு மின்சார மற்றும் நிதித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.