திருச்செந்தூர் கோயிலில் ₹25 லட்சம் மோசடி... பெண் ஊழியர் சஸ்பெண்ட்!

 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ₹100 கட்டணச் சிறப்புத் தரிசனப் பயணச்சீட்டுகளைப் போலியாக அச்சிட்டுப் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கோயில் பெண் தட்டச்சு ஊழியர் மேனகா தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் ₹100 கட்டணத்திலான சிறப்புத் தரிசனப் பயணச்சீட்டுகள் கவுண்டர்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தக் கட்டணக் கவுண்டரில் பணியாற்றி வந்த தட்டச்சர் மேனகா என்பவர், போலியான ரசீதுகளைப் பயன்படுத்திப் பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதனைத் திருக்கோயில் கணக்கில் செலுத்தாமல் முறைகேடு செய்வதாகச் சமூக வலைத்தளங்களில் கடுமையான புகார்களும், தகவல்களும் பரவின. சமூக வலைத்தளங்களில் வெளியான புகாரைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தினர் இதுகுறித்து அதிரடித் தணிக்கை மற்றும் ரகசிய விசாரணை நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண் ஊழியர் மேனகா கணினியில் போலியான மென்பொருள் அல்லது ரசீதுகளைப் பயன்படுத்தி, நீண்ட நாட்களாகப் பல லட்சம் ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டது அப்பட்டமாகத் தெரியவந்தது. முறைகேடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட தட்டச்சர் மேனகாவை உடனடியாகப் பணியில் இருந்து சஸ்பெண்ட் (தற்காலிகப் பணிநீக்கம்) செய்து கோயில் இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்கும் பொருட்டு, அவரிடம் இருந்து முதற்கட்டமாகச் சுமார் ரூபாய் 25 லட்சம் வரை கோயில் நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகக் கோயில் அதிகாரிகள் தரப்பில் முழுமையான கணக்குத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மோசடியில் மேனகாவுக்கு உதவியாக வேறு ஏதேனும் கோயில் ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா? மற்றும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்தும், அவர் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். முருகனின் திருத்தலத்திலேயே பக்தர்களின் பணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் ஆன்மீகப் பெரியோர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.