ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு அருள்பாலித்த ஏலேல சிங்க விநாயகர்!

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் மூலவருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருநாளின்போது ரூபாய் நோட்டுகளால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கமாகும்.

நடப்பாண்டு விழாவை முன்னிட்டு மூலவருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து ரூ.1, ரூ.2, ரூ.5 முதல் ரூ.500 வரையிலான பல்வேறு புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கருவறை மற்றும் சந்நிதி முழுவதும் கலைநயமுடன் அலங்காரம் செய்யப்பட்டது.

சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த ஏலேல சிங்க விநாயகரை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். கோயிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.