பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம்... பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையாகப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டம் குறித்து, விரைவில் நடைபெறவுள்ள இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த "பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டம்" அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இருப்பினும், கடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது முதலமைச்சர் விஜய் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாததால், மகளிர் மத்தியில் சற்றே ஏமாற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்துவது குறித்த ஆலோசனைகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. வரும் புதிய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் இந்த முக்கிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசாணை குறித்த விபரங்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான புதிய பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி, விண்ணப்பங்களை இணைப்பதற்கான தகுதி வரம்புகள் என்னென்ன என்பது போன்ற விரிவான வழிகாட்டுதல்களும் அந்த பட்ஜெட் அறிவிப்பில் உள்ளடக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த அடுத்தகட்ட நகர்வு, மகளிர் உரிமைத் தொகைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.