மகளிருக்கு ரூ.3,000.. 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் - ராமதாஸ் தேர்தல் அறிக்கை!

 

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கல்வியும், சமூக நீதியும் இந்த அறிக்கையின் முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். (தற்போது திமுக அரசு ரூ.1,000 வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது). அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குத் தரமான நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும்.

தனியார் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். கட்டாய மற்றும் தரமான இலவசக் கல்வி உறுதி செய்யப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 50,000 ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மொத்தம் 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் முறையான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவினர் அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் நிலையில், மருத்துவர் ராமதாஸ் தனது தரப்பு பாமகவிற்கான இந்தத் தனித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதும் இவரது அறிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது.