பட்டாகத்தியைக் காட்டி ரூ.34,000 கொள்ளை... 5 மணி நேரத்தில் திருடர்களைப் பிடித்த காவல்துறை!

 

மதுரை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரைப் பட்டாகத்தியைக் காட்டி மிரட்டி ரூ.34,800 பணத்தைப் பறித்துச் சென்ற நபர்களைக் புகாரளிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நாகமலை புதுக்கோட்டை அருகே மேலக்காலில் இருந்து கொடிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் பணியில் இருந்துள்ளார்.

ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் நிரப்பியுள்ளது. பின்னர் ஊழியர் திருமுருகன் பணம் கேட்டபோது, மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியைக் காட்டி மிரட்டி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த கலெக்ஷன் பணம் ரூ.34,800-ஐப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த மகாலிங்கம், முத்து இளங்கோவன் மற்றும் அசோக் ஆகியோர் இந்தத் திருட்டில் ஈடுபட்டதை அடையாளம் கண்ட போலீசார், அடுத்த 5 மணி நேரத்திற்குள் மகாலிங்கம் மற்றும் முத்து இளங்கோவன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். கொள்ளைச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைக் கைது செய்த காவல் குழுவினரை மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் பாராட்டி வாழ்த்தினார்.

தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அசோக்கை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே, பெட்ரோல் பங்கில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் கொள்ளைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.