ரூ.51 லட்சத்துக்கு விநாயகர் சதுர்த்தி லட்டு ஏலத்தில் எடுத்திருந்த தொழிலதிபர் மீது ரூ.3.45 கோடி நிதி மோசடி வழக்கு!

 

ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு ரூ.51.07 லட்சத்திற்குப் பிரசித்தி பெற்ற கணேஷ் லட்டை ஏலத்தில் எடுத்துப் புகழ்பெற்ற தொழிலதிபர் கொண்டபள்ளி கணேஷ் என்பவர் மீது, ரூ. 3.45 கோடிக்கும் அதிகமாக முதலீட்டு மோசடி செய்ததாகச் சைபராபாத் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள 'மை ஹோம் பூஜா' உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த கொண்டபள்ளி கணேஷ், தான் நடத்தும் ரியல் எஸ்டேட் மற்றும் மதுபான வணிகங்களில் முதலீடு செய்தால் மாதம் 6 சதவீதம் வட்டியும், 3 மாதங்களுக்கு ஒருமுறை லாபப் பங்கும் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இவரை நம்பி அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர்கள் உட்படப் பல குடியிருப்பாளர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பான ரூ. 3.45 கோடிக்கும் அதிகமான பணத்தை அவரிடமும், அவரது கூட்டாளி போயின்பள்ளி கிரணிடமும் முதலீடு செய்துள்ளனர்.

2024-ல் ரூ.29 லட்சத்திற்கு லட்டு ஏலம் எடுத்த கணேஷ், 2025-ம் ஆண்டு 'மை ஹோம் பூஜா கணேஷ் உட்சவ்' விழாவில் சாதனை விலையாக ரூ.51.07 லட்சத்திற்கு லட்டை ஏலத்தில் எடுத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வந்தர் போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். தொடக்கத்தில் சில மாதங்கள் பணம் கொடுத்தவர், பின்னர் பணத்தைத் தராமல் தாமதித்துள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் தனது வீடு மற்றும் அலுவலகத்தைக் காலி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சில்வியா ஸ்ரீனிவாஸ் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், சைபராபாத் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிதிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொண்டபள்ளி கணேஷைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.