ரூ.3,500 கோடியில் 'வெற்றி வீடு' திட்டம்.. யார் யாருக்கு வீடு கிடைக்கும்? என்னென்ன தகுதிகள்? எவ்வளவு நிதியுதவி? முழு விவரம்!

 

தமிழ்நாடு அரசு புதிதாகத் தொடங்கியுள்ள 'வெற்றி வீடு' கட்டும் திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் வீடுகள் வழங்கப்படும் மற்றும் தகுதி வரம்புகள் என்ன என்பது குறித்த விரிவான விவரங்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 70,000 வீடுகளைக் கட்டுவதற்காக அரசு ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியானவர்கள் ஆவர். கணவனை இழந்த கைம்பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தகுதியான பயனாளிகள் சொந்தமாகக் வீடு கட்டிக் கொள்ள ரூ.5 லட்சம் நிதியுதவி அரசாங்கத்தால் 4 தவணைகளாக நேரடியாக வழங்கப்படும். 360 சதுர அடி முதல் 500 சதுர அடி பரப்பளவில் சமையலறையுடன் கூடிய நவீன வீடுகள் கட்டப்பட உள்ளன.

கழிப்பறை வசதி இல்லாத பயனாளிகளுக்கு, வீட்டின் நிதியுதவியுடன் கூடுதலாக ரூ.12,000 செலவில் அரசு சார்பிலேயே தனியாகக் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்படும்.

ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த 'வெற்றி வீடு' திட்டம், தகுதியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.