நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு... நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்!
கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று சென்னை எழும்பூர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்ட இந்த ₹4 கோடி விவகாரம் குறித்துச் சிபிசிஐடி போலீசார் தீவிர புலனாய்வு மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீசார் அண்மையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகை நகல்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுந்தர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட மொத்தம் 11 பேர் இன்று நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜராகினர். எனினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களும் ஆஜராகாததால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகாத நபர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும், ஜூலை 16 அன்று அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் முறைப்படி வழங்கப்படும் என்றும் நீதிபதி சுந்தர பாண்டியன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்பி கிரிராஜன் இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள சூழலில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் பாஜக மற்றும் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக இடையே புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.