திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.18 கோடி காணிக்கை!
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாகவே பக்தர்களின் கூட்டம் சீராக இருந்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களை ஒட்டி வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 65,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ. 4.18 கோடி வசூலாகியுள்ளது. சுமார் 24,292 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தித் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர்.
தற்போது தர்ம தரிசனம் (இலவச தரிசனம்) செய்ய வரும் பக்தர்கள், சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. மார்ச் 29-ஆம் தேதிக்கான டோக்கன்கள் ஏற்கனவே தீர்ந்துவிட்டதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடியாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாகச் சென்று தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி திருமலையில் 'சாளக்கட்ல வசந்தோற்சவம்' நடைபெற உள்ளது. இந்த நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.