ரூ.5 கோடி பேரம்... அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் சர்ச்சை - லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெறத் தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசிய விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்குப் பெற்றுத் தருமாறு கூறி ஒருவர் ரூ.5 கோடி தருவதாகப் பேரம் பேசினார். அதைச் சிரித்துக் கொண்டே லயோலா மணியிடம் சொல்லி அனுப்பினேன்" எனத் தெரிவித்தார்.
"ரூ.500 கோடி கொடுத்தாலும் தகுதியற்ற ஒருவருக்கு முதலமைச்சர் எந்தப் பதவியும் தரமாட்டார். நான் தளபதியின் தம்பி; அதனால் எந்தப் பணமும் பெறாமல் தகுதியான குப்புசாமி அண்ணனுக்கு அந்தப் பதவியைத் தரச் சொல்லி அனுப்பியிருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில், லஞ்சம் கொடுக்க முன்வந்த நபர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தி அவர் மீது அமைச்சர் உடனடியாகக் காவல் துறையில் புகாரளிக்க வேண்டும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தில் அமைச்சர் கூறிய தகவலையே முதன்மை ஆதாரமாகக் கொண்டு, லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான விசாரணை நடத்தக் கோரி, திமுக சார்பில் பரந்தாமன் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் மனு அளித்துள்ளார்.
பொதுமேடையில் அமைச்சர் பேசிய இந்த ரூ.5 கோடி பேரம் பற்றிய பேச்சு, ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே புதிய அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.