ரூ.50 கோடி பேரம்... மதிமுக இனி 'மகன் திமுக' - வைகோவை கடுமையாக அட்டாக் செய்த மல்லை சத்யா!

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோரை, திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதிமுகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளைக் கடுமையாகச் சாடினார். திமுக கூட்டணியில் இருந்து வைகோ தற்போது 99 சதவீதம் வரை விலகிவிட்டதாகத் தெரிவித்த மல்லை சத்யா, மதிமுக என்ற கட்சியின் அடையாளமே தற்போது மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மல்லை சத்யா, வைகோ தனது மகனான துரை வைகோவிற்கு கட்சியில் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கியதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். வாரிசு அரசியலை எதிர்த்துத் தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது கொள்கை மாறி வைகோவின் சொந்த 'மகன் திமுக'வாக உருமாறிவிட்டதாகக் கேலி செய்தார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதைக்குச் செல்வதா என்பதில் மதிமுகவிற்குள் பெரும் குழப்பம் நீடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மதிமுக தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான தவெகவின் கூட்டணிக்குள் நுழைவதற்காக சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மல்லை சத்யா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் அந்த விவகாரத்தை நினைவு கூர்ந்த அவர், மதிமுகவின் அரசியல் சுயநலங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றார்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை வாரிசு அரசியல் என்று விமர்சித்துவிட்டு, தற்போது வைகோவும் அதே பாதையையே தேர்ந்தெடுத்துள்ளார் என்ற மல்லை சத்யாவின் இந்த விமர்சனம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் திராவிட இயக்கக் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.