கேஸ் சிலிண்டருக்கு ரூ.50 கூடுதல் வசூல்... தனியார் ஏஜென்சிக்கு ரூ.30,000 நஷ்டஈடு விதித்து உத்தரவு!

 

பொதுமக்களிடம் கேஸ் சிலிண்டர் விநியோகத்தின் போது பில் தொகையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சிலிண்டரைத் தாமதமாக விநியோகித்ததோடு, கூடுதலாக 50 ரூபாய் வசூலித்த தனியார் கேஸ் ஏஜென்சிக்கு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூபாய் 30,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவுத் தொகை வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், தனது வீட்டு உபயோகத்திற்காகத் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் பாரத் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்திருந்தார். பொதுவாக, சிலிண்டர் புக் செய்த சில நாட்களுக்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி, வாடிக்கையாளருக்கு சுமார் 9 நாட்கள் மிகத் தாமதமாகவே சிலிண்டரை டெலிவரி செய்துள்ளது.

இதுமட்டுமன்றி, சிலிண்டரை விநியோகம் செய்த ஊழியர், அரசு நிர்ணயித்து ரசீதில் குறிப்பிட்டிருந்த தொகையை விடக் கூடுதலாக 50 ரூபாயைக் கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார். கேஸ் ஏஜென்சியின் இந்தச் சேவை குறைபாடு மற்றும் கூடுதல் கட்டண வசூலால் அதிருப்தியடைந்த அந்த வாடிக்கையாளர், தனக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறைப்படி வழக்குகத் தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விரிவாக விசாரித்த திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் ஆணையம், தனியார் கேஸ் ஏஜென்சியின் தரப்பில் மிகத் தெளிவான சேவை குறைபாடு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது. மேலும், பில் தொகைக்கு மேல் ஒரு ரூபாய் கூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்ற விதிகள் இருக்கும் போது, ரூ.50 கூடுதலாக வசூலித்தது சட்டவிரோதம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

 சிலிண்டர் தாமதமாகக் கிடைத்ததாலும், கூடுதல் பணப் பறிப்பாலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 20,000 வழங்க வேண்டும். இந்த வழக்கிற்காக வாடிக்கையாளர் தரப்பில் செய்யப்பட்ட செலவினங்களுக்காக ரூபாய் 10,000 தொகையை அந்த ஏஜென்சி வழங்க வேண்டும். மொத்தமாக ரூபாய் 30,000 நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாகப் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு வழங்க தனியார் கேஸ் ஏஜென்சிக்கு ஆணையம் உத்தரவிட்டது.

மேலும், இனிவரும் காலங்களில் எந்தவொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பில் தொகைக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நுகர்வோர் ஆணையம் சம்பந்தப்பட்ட ஏஜென்சியைக் கடுமையாகக் கண்டித்தது.

இதன் தொடர்ச்சியாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பொதுத்துறை நிறுவனம், தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கேஸ் டீலர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இதுகுறித்து கடுமையான சுற்றறிக்கை (Circular) ஒன்றை அனுப்ப வேண்டும் என்றும் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.