ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு..  போக்குவரத்து வசதியுடன் 4 புதிய "நமோ நகரங்கள்"!

 

இந்தியாவில் அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கேற்ப, சமநிலையான மற்றும் நவீன நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் 4 புதிய "நமோ நகரங்கள்" உருவாக்கப்படவுள்ளன. தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தின் 42-வது கூட்டத்தில் இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நமோ நகரங்கள் அனைத்தும் வெறும் குடியிருப்புப் பகுதிகளாக மட்டும் இல்லாமல், அதிநவீனப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நகரங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நகரங்கள் அனைத்தும் 'நமோ பாரத்' பிராந்திய விரைவு போக்குவரத்து வழித்தடங்களை மையமாகக் கொண்டு, போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டு மாதிரியில் வடிவமைக்கப்படவுள்ளன. இதனால் மக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்கு அதிவேக ரயில்களை மிக எளிதாகப் பயன்படுத்த முடியும்.

டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளில், மக்கள் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த நான்கு நகரங்களும் தனித்தனியாக அமைக்கப்படும். இத்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்த மத்திய அரசு பெரும் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

திட்டத்தை விரைவாகவும் தரமாகவும் முடிப்பதற்காக ரூ.5,000 கோடி செயல்திறன் ஊக்கத்தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த நிதியில், அடுத்த 5 ஆண்டுகளில் திட்டப் பணிகளைத் தொய்வின்றித் தொடங்க ரூ.1,000 கோடி நேரடி மானியமாக வழங்கப்படவுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிவேகப் போக்குவரத்து வசதிகளுடன் புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த "நமோ நகரங்கள்" திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.