'தாமரையைத் தொட்டாலே ரூ.5,000'... தேர்தல் நேரத்தில் அதிர்ச்சி!
சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு குறிப்பிட்ட லிங்க் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் "பாஜகவின் தாமரை சின்னத்தைத் தொட்டால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000 தேர்தல் நிதியாக ஏறும்" என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்படுகிறது.
பயனர் அந்த லிங்க்கைக் கிளிக் செய்தவுடன், ஒரு போலி இணையதளம் திறக்கும். அதில் தாமரைச் சின்னம் இருக்கும். சின்னத்தைத் தொட்டவுடன், "பணம் பெற உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை உள்ளிடவும்" என்று கேட்கும் விவரங்களை உள்ளிட்ட சில நிமிடங்களில், உங்கள் செல்போனுக்கு வரும் OTP எண்ணை மோசடிக்காரர்கள் பெற்று, உங்கள் கணக்கில் உள்ள பணத்தைத் திருடிவிடுவார்கள்.
தமிழக சைபர் க்ரைம் பிரிவு இந்த விவகாரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதில், எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசோ இது போன்ற 'கிளிக் செய்தால் பணம்' என்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. இது முற்றிலும் பொய்யானது. அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்தோ அல்லது குழுக்களில் இருந்தோ வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்ய வேண்டாம். வங்கி கணக்கு எண், ஏடிஎம் பின், மற்றும் முக்கியமாக OTP எண்களை யாரிடமும் பகிரக்கூடாது.
இது போன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.
பாஜக தரப்பிலும் இது போன்ற போலிப் பிரச்சாரங்களுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், கட்சியின் பெயரைக் கெடுக்க யாரோ திட்டமிட்டு இதைச் செய்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இது போன்ற 'டிஜிட்டல் ஆசை வலைகள்' இன்னும் அதிகம் வீசப்படலாம். எனவே, எதையும் உறுதிப்படுத்தாமல் பகிரவோ அல்லது தகவல்களை உள்ளிடவோ வேண்டாம்.