ரூ.600 கோடி ஊழல்... துவரம்பருப்பு கொள்முதல் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

 

தற்போதைய தவெக அரசு துவரம்பருப்பைத் குறைந்த விலையில் வாங்கியதாகக் கூறி உண்மைகளை மறைத்து அவதூறு பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாமாயில் கொள்முதலில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

திமுக ஆட்சிக்காலத்தில் கிலோ ரூ.112.69 ஆக இருந்த துவரம்பருப்பு விலை, தற்போதைய அரசு பதவியேற்ற பிறகு கடந்த பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் அதிகபட்சமாக ரூ.136.95-க்கு வாங்கப்பட்ட பாமாயிலை, தற்போதைய அரசு லிட்டருக்கு ரூ.148 முதல் ரூ.154.99 வரை கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பாமாயில் கொள்முதலில் மட்டும் ரூ.600 கோடிக்கும் அதிகமான ஊழல் அரங்கேறியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.