ரூ.7 லட்சம் கோடி லாபம்... உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்... இந்தியப் பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்!

 

தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக 2-வது நாளாகப் பிரம்மாண்ட உயர்வைக் கண்டுள்ளன. சந்தையில் ஏற்பட்ட இந்த அதிரடி ஏற்றத்தால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.7 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,133 புள்ளிகள் வரை உயர்ந்து 76,726 புள்ளிகளில் வர்த்தகமானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முன்னணி நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் கணிசமான விலையேற்றத்தைச் சந்தித்தன. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகள் அதிகரித்து 23,731 புள்ளிகளைத் தொட்டது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சில்லறை வர்த்தகம் மற்றும் நுகர்வு அதிகரித்துள்ளதால் வாகனங்கள், நுகர்பொருட்கள் மற்றும் வங்கித் துறைப் பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டன.

உலகளாவிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவை இந்தியச் சந்தையின் ஏற்றத்திற்கு மேலும் வலு சேர்த்தன. பண்டிகைக் காலத்தில் பங்குச்சந்தை தொடர்ந்து பச்சை நிறத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.